தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ” இந்தியாவில் ஒமிக்ரான் வைகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் குறைந்தபட்சமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு இரண்டு பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 386 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 5878 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய உடன், உடனடி நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய காணொளி கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் நடவடிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா பாராட்டினார்” என குறிப்பிட்டார். 


மேலும், “ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் எப்போதும் முகக்கவசம் அணிவது அவசியம் என 2020ல் இருந்தே பொது சுகாதாரத்துறை ஒரு விதியை நிர்ணயித்து அமல்படுத்தி வருகிறது. மருத்துவமனையில் தான் அதிகமாக தொற்று பரவுகின்றது. அதனால் தான் மருத்துவமனையில் முகக்கவசங்களை கட்டாயமாக்கி இருக்கின்றோம். முகக்கவசம் அணிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனையிலும் முகக்கவசம் அணிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மருத்துவமனையில் மாதிரி பயிற்சி மேற்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.


அதனை தொடர்ந்து, “முதலமைச்சர் பொறுப்பேற்ற அன்று 26,465 ஆக கொரோனா தொற்று இருந்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 24,061 கான்சன்ட்ரேடர், 13 ஆக்சிஜன் ஜெனரேட்டர், 260 ஆக்ஸிஜன் பிளான்ட் ஆகியவற்றுடன் 2067 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பரவும் கொரோனா  உயிர் பறிக்கும் அள்விற்கு தீவிரம் இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 64,281 படுக்கைகள் தயாராக உள்ளது. தேவைப்பட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் படுக்கைகளை உருவாக்கும் வசதி நம்மிடம் உள்ளது.


இது நான்காவது அலை என்று கூட எடுத்துக் கொள்ள முடியாது. தற்போது தமிழகத்தில் கொரொனா தொற்று பரவல் குறைவாக தான் உள்ளது. மேலும் cluster பாதிப்பு இல்லாமல் தனிப்பட்ட பாதிப்பாக தான் இருக்கிறது. இந்த கொரோனா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உயர்ந்து வருகிறது. இதை அலை என்று எடுத்துக் கொள்ள முடியாது.  ஒரே நேரத்தில் 100 பேர் அல்லது 200 பேர் பாதிக்கப்பட்டால் மட்டுமே சமூக பரவல் உருவாகும்” என குறிப்பிட்டார். 


”தொடர்ந்து கொரோனா அதிகரித்தால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கூடுதல் ஆக்கலாம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்தால் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இணை நோயாளிகள் கவனத்துடன் இருக்க வேண்டும்”  என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.