ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது, அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறாரோ என தோன்றுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 20 இடங்களில் கட்சி கொடியேற்றம் நிகழ்விற்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அன்புமணி, “காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கடந்தாண்டு 685 டி எம் சி தண்ணீர் காவிரியில் வீணாக கடலிலே கலந்தது, உபரிநீரை தருமபுரி மாவட்டஏரி குளங்களை நிரப்பும் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போரடியது பாமகதான். காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கவேண்டும். வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என முதன்முதலில் பாமக தான் குரல் கொடுத்தது. இதனை தடை செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில், 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை ஆளுநர் நிறைவேற்றவில்லை. இதுவரை 47 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரிழந்துள்ளனர். இதனை ஆளுநர் கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்தால், அந்த நிறுவனங்களுக்கு ஆளுநர் சாதகமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசியது குறித்து, கொடுத்த தண்டனை என்பது மிகப்பெரியது. ராகுல் பேசியது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் நீதிமன்றம் எச்சரித்திருக்கலாம், ஆனால் தண்டனை என்பது தவறானது. மேலும் ராகுலுக்கு தண்டனை கொடுத்த நீதிபதியே, ஒரு மாத காலம் நிறுத்தி வைத்துள்ளார். ஒருவேளை ராகுல் மேல்முறையீடு சென்று, அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் நீக்கம் செய்திருக்கலாம். இதில் பாஜக அரசு அவசரப்படாமல் இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.
மக்களை நாசபடுத்தும், விவசாயத்தை நாசபடுத்தும், சுற்று சூழலை நாசபடுத்தும் என் எல் சி திட்டம் தேவையே இல்லை..என் எல் சி இல்லையென்றால் தமிழகம் இருண்டு போய்விடாது நிலம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கு எந்த ஒரு பயனுமில்லை. மேலும் தமிழக வேளாண்துறை அமைச்சர் அதிகம் பேசுவதை நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பேச வேண்டும் என்எல்சி மூன்றாவது நிலக்கரி திட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சரின் சொந்த கிராமமான முட்டம் கிராமமும் வருகிறது, இது அமைச்சருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை, ஏற்கனவே என் எல் சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கபட வில்லை, சுற்றுசூழலை அழிக்கும், விவசாயத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் தேவையே இல்லை, ஸ்டெர்லைட் ஆகட்டும், எட்டுவழிச்சாலை திட்டமோ எதுவுமே தேவையல்லை, ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்ட்டிருக்கிறது, பாதுகாக்கபட்ட டெல்டா பகுதியில் இப்படியொரு திட்டம் தேவையில்லை.
தருமபுரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு என்பது மன வேதனையளிக்கிறது, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து யானை உயிரிழப்பிற்கு காரணமானவர்கள்.மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இந்தியாவிலேயே மது விற்பனை தமிழகம்தான் அதிக விற்பனை இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை 24 கோடி. ஆனால் அங்கு மது விற்பனை 17 ஆயிரம் கோடி. தமிழகத்தில் மது விற்பனை 45 ஆயிரம் கோடி இருந்தும், அடுத்த ஆண்டு 50,000 கோடியை இலக்காக அறிவித்திருப்பது வெட்கக்கேடு. மது விற்பனையை குறைக்கத்தான் அமைச்சராக இருக்கிறார், ஆனால் அதை அமைச்சர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என அன்புமணி தெரிவித்தார்.