மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஓ.பி.எஸ். அணியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல மணவிழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்கள் ரஞ்சித் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக ஏராளமான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு குத்தாலம் கடைவீதியில் செண்டை மேளம் முழங்க திறந்த வாகனத்தில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எதிர்ப்பது ஏன்?
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று வி.கே சசிகலா கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார். சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அவர்கள் கழக விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர் முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம்.
சட்டவிதிகள்:
அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகாலம் முழுமையாக தமிழகத்தை வழிநடத்தி ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்ற நிலையை அம்மாவும், புரட்சித்தலைவரும் உருவாக்கினார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். கழகத்தின் சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும், ஏற்கனவே இருக்கும் பழைய உறுப்பினர்களையும் புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர்களை வைத்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அப்படி செய்தால் உறுதியாக, கீழ் மட்ட தொண்டர்கள் கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும் அப்படிப்பட்ட சூழ்நிலைதான் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து அம்மா காலம் வரை கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம் என தெரிவித்தார்.
பொதுச்செயலாளர்
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த போது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்தது. இதனால், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டது. இதனால், தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
OPS: அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓ.பி.எஸ்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.