கரூர் அருகே காக்காவாடியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


பார்லிமென்ட்டில் ஜனாதிபதி  திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி செலுத்தும் தீர்மானத்தின் மீதான விவாதம் குறித்து நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, பிரதமர் மோடி நீல நிறத்திலான ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். இந்த ஜாக்கெட் வழக்கமான பருத்தி துணியால் செய்யப்பட்டது அல்ல, மாறாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துணியால் தயாரிக்கப்பட்டது. அதோடு, இந்த உடை தமிழகத்தின் கரூர் அருகே உள்ள காக்காவடி பகுதியில் உள்ள ரெங்கா பாலிமர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.


 




 


நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உடை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில், குளிர்பான பாட்டில்கள், மினரல் வாட்டர் பாட்டில் மற்றும் பெட் பாட்டில்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்து, ஆடைகளை உருவாக்க முடிவு செய்தது. இந்த ஆடைகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும், ஆயுதப்படை வீரர்களுக்கும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 10 கோடிக்கும் மேற்பட்ட பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை பிரதமர் மோடியிடம் வழங்கினர். இதைத்தான் பிரதமர் மோடி  பார்லிமென்ட்டுக்கு அணிந்து வந்திருந்தார். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரதமர் மோடியின் இந்த ஜாக்கெட்டை தயாரித்தது தமிழகத்தின் கரூரில் இயங்கிவரும் ஸ்ரீ ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம் என்பதுதான். மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 9 விதமான வண்ண ஆடைகளை, ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு அனுப்பி இருந்தது.


 




 


இந்த 9 கலர்களில் இருந்து, பிரதமர் மோடிக்கு நீல நிற துணி தேர்வு செய்யப்பட்டது. இதன் பிறகு, அந்த துணி குஜராத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் தையல்காரருக்கு அனுப்பப்பட்டது. அவர் அந்த ஜாக்கெட்டை தயார் செய்தார். இத்தகைய ஜாக்கெட் ஒன்றைத் தயாரிக்க சுமார் 15 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது. அதேசமயம், முழு ஆடையைத் தயாரிக்க சுமார் 28 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது.


கரூர் ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்ததாவது:


இந்நிறுவனம் நான்கு வகையாக நார், நூல், ஆடை, கற்கள் ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. இந்த பெட் பாட்டில்கள் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் msme விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இயற்கை வேகமாக மிக பெரிய பிரச்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதனை குறைக்கும் விதமாக இயற்கையை காப்பாற்ற வேண்டும்.மறுசுழற்சி நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.


 


 


 




நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து சராசரி 25 டன் பாலிஸ்டர் நார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பெட் பாட்டில்கள் மூலம் ஆடைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ஏற்றுமதி செய்ய அடுத்த இலக்காக இருக்கிறது. இந்த ஆடைகளுக்கு தண்ணீர் வண்ணம் பயன்படுத்தப்படுவதில்லை. முதலில், நார் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது துணியாக மாற்றப்பட்டு, இறுதியாக, ஆடை தயாரிக்கப்படுகிறது. இந்த ஜாக்கெட்டின் சந்தை விலை வெறும் 2,000 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.