பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோசங்களை எழுப்பியவாறு பிரதமரை வரவேற்க ராமேஸ்வரத்திற்கு பாஜகவினர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க, ராமேஸ்வரத்தில் பாஜகவினர் திரண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்.
இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இன்று இரவு தங்குகிறார். அவரை வரவேற்கும் விதமாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக தொண்டர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
அவரை வரவேற்கும் விதமாக சாலைகளின் இரு புறங்களிலும் வானளாவிய உயரத்தில் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளது. மகளிர் அணியினர், பாஜக நிர்வாகிகள் என சாரை சாரையாக ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.