இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க., தமிழ்நாட்டில் வெறும் 4 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் வலுவில்லாமல் உள்ள பா.ஜ.க.வை வலுப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


இந்த சூழலில், தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலான மைசூர் – பெங்களூர் – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று பெங்களூரில் தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்ட பிறகு பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் 36வது பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.




இந்த பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூழலில், இன்று இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகிறார். அமித்ஷா விமானம் மூலமாக இரவு 11 மணிக்கு சென்னை வருகிறார். தமிழ்நாடு வரும் அமித்ஷா நாளை பா.ஜ.க. சார்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது, அவரிடம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் பல்வேறு முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.


தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை பிரம்மாண்டமான முறையில் வரவேற்க தமிழக பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் இப்போதோ பா.ஜ.க. களமிறங்கிவிட்டது. இதன் தாக்கமாகவே, தென்னிந்தியாவிலே மிகவும் பலவீனமாக உள்ள தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர்கள் அடிக்கடி வருகை புரிந்து வருகின்றனர்.




தமிழ்நாட்டிற்கு அடுத்த 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் வருகை தர உள்ளதாக ஏற்கனவே தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஏற்கனவே, தமிழ்நாட்டிற்கு மத்தி அமைச்சர்களான மன்சுக் மாண்ட்வியா, பாரதி பிரவீன்பவார், ஜிதேந்திரசிங், சுபாஷ்சர்க்கார், பியூஷ் கோயல் வருகை புரிந்திருந்தனர்.


இந்த சூழலில், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வருகை புரிகின்றனர். தமிழ்நாட்டிற்கு வரும் அமித்ஷா பல்வேறு முக்கிய உத்தரவுகளை கட்சியினருக்கு பிறப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் அவர்களது செயல்பாடுகள் தொடர்பாக அமித்ஷாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : ’அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு


மேலும் படிக்க : ஸ்டாலின் ரூட்டை எடுக்கும் கேரளா... ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க திட்டம்... அதிரடி காட்டும் பினராயி...!