Chidambaram University :  இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் துவங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்ற இரவு முதலே சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை மறுநாள்,  3 நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இன்று காலை முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் 23 மாவட்டங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடலூர்  மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று நடைபெறவிருந்த  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மாற்று தேதி பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 தட்டச்சுத் தேர்வு ஒத்திவைப்பு


தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 12 மற்றும் 13) நடைபெற இருந்த தட்டச்சுத் தேர்வுகள் கன மழை காரணமாக நவம்பர் 19, 20 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் நடக்கிறது. இளநிலை, முதுநிலை என்ற இரு நிலைகளில் இத்தேர்வுகள் நடக்கின்றது ஒவ்வொரு தேர்வும் இரு நிலைகளில் தாள் -1, தாள்-2 என இரண்டு தாள் முறையில் நடக்கின்றன. 


இந்தத் தேர்வுகள் கடந்த 75 ஆண்டுகளாக தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள்-2 ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெற்று வந்தது. அதாவது ஒன்றாவது தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையில் இருக்கும். இந்த நிலையில், இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தாள்-1 கடிதம் மற்றும் அறிக்கை தேர்வாகவும், தாள்- 2 வேகத் தேர்வாகவும் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.


இதை அடுத்து தொழில்நுட்பக் கல்வி தேர்வுகள் வாரியத் தலைவர், நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தட்டச்சுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தார். இந்தத் தேர்வு நாளை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 12 மற்றும் 13) நடைபெற இருந்த தட்டச்சுத் தேர்வுகள் கனமழை காரணமாக நவம்பர் 19, 20 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.