பிரதமர் மோடி தங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருவதாகக் கூறியதாகவும், டெல்லிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் யானை பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார்.
முதுமலை வந்த பிரதமர்:
ஒரு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலைய பன்னாட்டு முனைய திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் தொடக்க விழா, ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டார். தொடர்ந்து பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதனையடுத்து, கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதிக்கு வருகை தந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு ஆஸ்கர் விருது பெற்ற ‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் தோன்றிய யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளி இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி மீண்டும் கர்நாடகா திரும்பினார்.
பேசியது என்ன?
இந்நிலையில், பிரதமர் மோடி பிரதமர் மோடி தங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும், டெல்லிக்கு தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பெள்ளி தெரிவித்துள்ளார்.
மேலும் யானைகளை வளர்த்த விதம் குறித்து பிரதமர் மோடி தங்களிடம் கேட்டறிந்ததாகவும்,
பள்ளிக்கூடமும் சாலை வசதியும் வேண்டுமென்றும் தான் பிரதமரிடம் கோரியுள்ளதாகவும் பெள்ளி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 12ம் தேதி அமெரிக்காவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட The Elephant Whisperers படம் வென்று நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.
ஆஸ்கர் விருது:
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த நிலையில், பெண் இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் முதுமலை தெப்பக்காடும், இப்படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினரும் நாடு முழுவதும் பேசுபொருளாகினர்.
இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை ரகுவைக் காணவும் கூட்டம் அலை மோதி வர்கிறது. இத்தகைய நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிட்டு சென்றுள்ளார்.