பிரதமரின் 45 மணி நேரம் தியானம்:
மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு மோடிக்கு வருகை புரிய உள்ளார். இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக நாளை மாலை (30 ஆம் தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து இறங்குகிறார். அங்கிருந்து மாலை 4 அளவில் கிளம்பி ஹெலிஹாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைகிறார். பின்னர் 4.45 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகை செல்கிறார். பின்னர் மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காரில் கன்னியாகுமரி படக்குத்துறை வருகிறார். 5.40 மணிக்கு படகுத்துறையில் இருந்து படகு சவாரி மூலம் விவேகானந்தர் நினைவிடம் சென்றடைகிறார். அங்கு செல்லும் அவர் விவேகானந்தர் நினைவிடத்தில் தொடர் தியானத்தில் ஈடுபட உள்ளார். குறிப்பாக 31 ஆம் தேதி, 1 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இரவு பகலாக தியானத்தில் ஈடுபடும் அவர் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு விவேகாந்தர் நினைவிடத்திலிருந்து புறப்படுகிறார். பின் அங்கிருந்து படகுசவாரி மூலம் சென்று 3.20க்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்லும் வகையில் பயண திட்டம் அமைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபடவுள்ளார். இதே போல கடந்த மக்களவை தேர்தலின் போதும் பிரச்சாரம் நிறைவு பெற்ற பின்னர் உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரம் கொண்ட கேதார்நாத் கோவிலுக்கு சென்று 17 மணி நேரம் அங்குள்ள பனிக்குகையில் தியானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள் அனுமதி..?
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு 30 ஆம் தேதி ( நாளை) முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி என்பது 3 நாட்கள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு நேற்று காலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாய் சோதனை, வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு கன்னியாகுமரியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். யார் யார் தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களின் பின்புலம் என்ன? என்பது தொடர்பான பட்டியலையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் தனியார் விடுதிகளில் தங்கி இருப்பவர்களிடம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 7வது கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரதமரின் இந்த பயண திட்டம் அமைந்துள்ளதாக தெரிகிறது. பிரதமரின் வருகையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பிற்கு வரவுள்ளது. இதற்காக டிஐஜி பிரவேஷ்குமார் கன்னியாகுமரி வருகை புரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதோடு மோடியின் பயணங்கள் அமைய உள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். மோடியின் வருகை மற்றும் அவர் மேற்கொள்ள உள்ள தொடர் தியானம் தேர்தலை நோக்கிய பயணமாக அமைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.