தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வேட்டையன் படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நலம் விசாரித்த பிரதமர் மோடி:


ரஜினிகாந்திற்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் இருந்த காரணத்தால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த இதய அறுவை சிகிச்சையால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் பின்னர், ரஜினிகாந்தின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.






அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த்திடம், பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது,, அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி பிரார்த்திப்பதாக லதா ரஜினிகாந்திடம் கூறியுள்ளார். இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களில் வீடு திரும்பும் ரஜினிகாந்த்:


ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஏற்கனவே ரஜினிகாந்திற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.