தமிழகம் முழுவதும் பெய்துவரும் மழைக்கு நடுவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று (மே 10ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள் எழுதுகின்றனர். 


கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த மே 5ஆம் தேதி மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுதுகின்றனர். முன்னதாக நேற்று (மே 9) ஆங்கில மொழிப் பாடத் தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 3 தேர்வர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.




இதற்கிடையே மே 6-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை 9,55,139 பேர் எழுதுகின்றனர். இன்று (மே 10-ம் தேதி) பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


இன்று தமிழ் மொழித் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் (மே 12) ஆங்கிலத் தாள் நடைபெற உள்ளது. அதற்கடுத்த நாட்களில் துறைசார் தேர்வுகள் நடைபெற உள்ளன. இயற்பியல், பொருளாதாரம் மற்றும் கணினித் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் மே 31ஆம் தேதி 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவடைய உள்ளது.


என்ன நடவடிக்கை?


பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண