கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள் ரம்யா. இவர் மருந்தக துறையில் எம்எஸ்சி பட்டதாரியாக இருந்து வருகிறார். இவர் கடலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், மருந்தக பணியாளராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார். தனியார் மெடிக்கலில் பணியாற்றி வந்த பொழுது இவரும், கடலூர் மாவட்டம் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து இரு வீட்டிலும் எதிர்ப்பு வந்துள்ளது. பின்னர், பெற்றோரை சமாதனம் செய்து, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 6 தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கார்த்திகேயன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், கார்த்திகேயனுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். கழிவறை வசதி செய்து தர வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தும் கார்த்திகேயன், செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திகேயனுடன் சண்டையிட்டு, ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். அப்பொழுது ரம்யாவிடம் தான் சில நாட்களில் புதிதாக வீடு பார்த்து அங்கு சென்று குடும்பம் நடத்தலாம் என கூறியுள்ளார். ஆனால் கார்த்திகேயன் தொடர்ந்து வீடு பார்க்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக சம்பவத்தன்று தொலைபேசியில் ரம்யா மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. ரம்யா தனது தாய் வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் கார்த்திகேயனுடன் சண்டையிட்டு உள்ளார்.
இந்நிலையில் கார்த்தியின் ரம்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. காதல் கணவன் திட்டியதால் மனமுடைந்த ரம்யா, தாய் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால், ரம்யாவின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும், விசாரித்து வருகிறார். விசாரணை முடிவில் ரம்யாவின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்த முழு தகவல் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).