Platform Ticket: 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூபாய் 10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல்
பண்டிகைக்காலத்தில் சென்னையில் இருந்து ரயில்கள் மூலம் சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இவர்களை வழி அனுப்ப அவர்களுடன் நண்பர்கள், உறவினர்கள் செல்வார்கள். இதுபோன்ற பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.20 ஆக தெற்கு ரயில்வே அக்டோபர் 1 ஆம் தேதி உயர்த்தியிருந்து. இந்த கட்டணமானது அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டிருந்தது.
பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே ரயில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், ரயில் நடைமேடை கட்டண உயர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த கட்டணம் உயர்வு தொடர்பாக பலர் தரப்பில் எதிர்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட்
இந்நிலையில், தெற்கு ரயில்வே ஆனது 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணத்தை ரூபாய் 20 லிருந்து ரூபாய் 10 ஆக குறைத்தது. அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணத்தை ரூபாய் 20 லிருந்து ரூபாய் 10 ஆக சென்னை ரயில்வே கோட்டம் குறைத்துள்ளது. இந்த ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு நடைமேடை கட்டண உயர்வு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. பல ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குவதற்கு பயணிகள் அலைக்கழிய வேண்டிய நிலை இருந்தது. 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமம்படும் நிலையில், அப்போது இரு மடங்காக ரயில் நடைமேடை கட்டணம் உயர்த்தியிருந்தது பயணிகளிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலர் தரப்பில் எதிர்ப்பு வந்ததை அடுத்த சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 8 ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை கட்டணத்தை ரூபாய் 10 ஆக குறைத்துள்ளது என சென்னை கோட்டம் தெரிவித்தது. ரயில்மேடை கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.