வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் அறிவித்தது.இது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிராக வன்னிய குல சத்திரையர் கூட்டு இயக்கம் என்னும் அமைப்பின் தலைவர் சி.ஆர்.ராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் அமலில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
1. உள் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா??
2.சாதி அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்க முடியுமா?
3. முறையான வரையறுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாமல் இது போல உள் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா?- மதுரைக்கிளை நீதிபதிகள் கேட்டனர்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சட்டரீதியான இட ஒதுக்கீடு அமைய வாய்ப்பு அளிக்கும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்கவும்,
அதுவரையிலும் வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுடைப்படுத்த இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில், சிறப்பு அமர்வாக நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு,
1. உள் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா??
2.சாதி அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்க முடியுமா?
3. முறையான வரையறுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாமல் இது போல உள் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா?
உள்ளிட்ட 7 கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அனைத்து மனுக்களையும் அனுமதித்து, 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது எனக்கூறி 10.5% உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை
ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர்களின் கல்வி இந்த தீர்ப்பால் பாதிக்கப்படும் என்பதால் மேல்முறையீடு செல்லும் வகையில், தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டது. அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.