சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஐ.என்.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதிகாலையில் நடந்த இந்த சோதனை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும், ஏற்கனவே என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக மத்திய அரசு தடை விதித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்றது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் திருவொற்றியூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரசாக் என்பவரது வீட்டில் 6 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரில் பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் முகமது கைசர், தேனி மாவட்டம் கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி ஆகியோர் வீடுகளிலும் இந்த சோதனையானது நடந்தது.
இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட இடங்களில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் குவிந்தனர். இதற்கிடையில் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த தஞ்சையைச் சேர்ந்த முகமது அசாப் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்காக அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.