சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 3 மணியளவில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடத்தி நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். 


நீட் தேர்வு பிரச்னை 


இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக நந்தனத்தை சேர்ந்த வினோத் (எ) கருக்கா வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்கொண்டு நடத்திய விசாரணையில், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு, ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்துள்ளது.


இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை. இவர் இவ்வாறு பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர். இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன. 


இவர் மீது 2015 ஆம் ஆண்டு R-1 மாம்பலம் காவல் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதும், 2017ம் ஆண்டு E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குவிக்கப்பட்ட போலீசார் 


இந்த குண்டுவீச்சில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குண்டுவீச்சு சம்பவத்தை கேட்டு அறிந்த பாஜகவினர் ஏராளாமானோர் அங்கு குவிந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக அலுவலகத்தில் எப்போதுமே, பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தால் மேலும் ஏராளாமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 






முன்னதாக,குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் கூறுகையில், “நள்ளிரவு 1:30 மணியளவில் எங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் நடந்தது. அதில் திமுகவின் பங்கு இருந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசசுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம்... பாஜகவினர் இதுபோன்ற விஷயங்களுக்கு பயப்பட வேண்டாம்” என்று கூறினார்.