வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது.
குடிநீரில் மனித கழிவு:
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத சிலர் மனிதக் கழிவுகளை கலந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அத்துடன், குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
கைது செய்யப்படாத குற்றவாளிகள்:
மேலும் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல், இறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 46 பேர், பிற சமூகத்தை சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ள முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், பயிற்சி காவலர் முரளிராஜா மற்றும் முன்னாள் கவுன்சிலர் உள்பட 8 பேரை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி மத்திய சிறை அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், மேலும் இருவர் ஆஜராகினர். இவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுநல மனு
இதைத்தொடர்ந்து, குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் சார்பில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கினை விசாராணை செய்த, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அப்போது குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரங்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உள்ளது. உயர் நீதிமன்றம் இருக்கும்போது உச்சநீதிமன்றம் இதில் ஏன் தலையிட வேண்டும் என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் தேவைப்பட்டால் மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தினை நாடலாம் என நீதிபதி அறிவுறுத்தினார்.