திருப்பத்தூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ உடையில் வந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு எம்எல்ஏ நல்லதம்பி ராயல் சல்யூட் அடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் நல்லதம்பி ஆகியோர் வருகை புரிந்தனர்.
அப்போது, மாற்றுத்திறனாளி குழந்தைகள் பல்வேறு வேடங்களில் வந்து அசத்தினர். அதில், பாரதியார் போல வேடமிட்டு இருந்த குழந்தை அனைவரையும் வரவேற்றது. பின்னர் ராணுவ உடையிலிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சல்யூட் அடித்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் 458 பயனாளிகளுக்கு சுமார் 26 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து ரொக்கப் பரிசு 10ஆயிரம் வழங்கினார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 170 வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர்.