தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, மநீம உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பலமான மற்றும் வெற்றி கூட்டணியாக கடந்த 8 வருடங்களாக திகழ்ந்து வருகிறது. எனவே இந்த முறையும் இதே கூட்டணியை தொடர திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் நிறைவேற்றி வருகிறது. அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கும் போது அந்த கட்சிகளை அழைத்து பேசி சமாதானம் செய்து வருகிறது.

Continues below advertisement

காங். தொகுதி பங்கீட்டு குழு

இந்த நிலையில் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க முதல் ஆளாக குழு அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சுராஜ் ஹெக்டே, நிவேதித் அலவா மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்று காலை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எத்தனை தொகுதிகளை கேட்பது, எந்த எந்த தொகுதிகளை கேட்பது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 

கூடுதல் தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்

அந்த வகையில கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதே போல 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் 10 இடங்களிலும் வெற்றியை பெற்றது. எனவே இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான பட்டியலோடு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

 

விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இதனை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுக சார்பாக இன்னும் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவில்லை, விரைவில் குழு அமைக்கப்படும். அந்த குழுவோடு தொகுதி தொடர்பாக பேசிக்கொள்ளுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்றைய சந்திப்பு மரியாதையான சந்திப்பு, திமுக சார்பாக குழு அமைத்த பிறகு தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்படும். கூட்டணி தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்தது. இந்த சந்திப்பின் மூலம் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என கூறி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.