ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்ட நபர் ஒருவர், அங்கிருந்த சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அக்கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். மேலும்
நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது.
வேப்பம்பாளையத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிறுமியிடம் ஒரு நபர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த சிறுமியின் தாய் அந்த நபரை தாக்க முயன்றதோடு, கடுமையாக வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர்அவரை சமாதானப்படுத்திய நிலையில் அந்த தாய், சிறுமியை அழைத்து கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.