ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தன்னை உச்ச நீதிமன்றம் விடுவிக்க வேண்டுமென பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஏன் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் உரிமை குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
அதில், ''பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கனவே தெளிவாகிவிட்டது. விடுதலை விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு கொண்டு வர வேண்டாம்’’ என உச்ச நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது