கரூரில் லுங்கி அணிந்து வந்தவர்கள் உள்ளே செல்லக்கூடாது என காவலர் தெரிவித்ததால் எஸ்.பி அலுவலகம் வெளியே காத்திருக்கும் கிராம மக்கள்.


 




கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா கொசூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலியப்பட்டி பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.  இரவு 8 மணி அளவில் கோவில் அருகே தேவராட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை கலைக்குழுவினர் ஆடினர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 


இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். கோபம் அடைந்த ஆனந்தன் மதுபோதையில் கோவிலில் இருந்த அரிவாளை எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த  தாமரை என்ற பெண்மணியின் தோள்பட்டை மற்றும் கழுத்தில் அரிவாளால் வெட்டி உள்ளார். உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமரையை மீட்டு அருகில் உள்ள மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


 


 




இந்த சம்பவம் தொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.அப்போது எஸ்.பி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் லுங்கி அணிந்து வந்த நபர்கள் உள்ளே செல்லக்கூடாது என்று கூறியதால் கிராம மக்கள் அதிர்ச்சடைந்தனர். வேஷ்டி அணிந்த ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்ததால் கிராம மக்கள் பலர் எஸ்.பி அலுவலகம் வெளியே தரையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கிராம மக்கள் நீண்ட நேரமாக எஸ்.பி அலுவலகம் வெளியே காத்துக் கிடக்கின்றனர்.


 


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.


அநியாயமாக அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன சட்ட அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் இன்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சதீஷ், சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன், கரூர் மாநகராட்சி உறுப்பினர் தண்டபாணி, சிஐடியு மாவட்ட பொருளாளர் சரவணன், சாலை போக்குவரத்து சங்க பொறுப்பாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


 


 




 


 


அப்போது ஆன்லைன் அபராதத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கேரளா அரசை போல ஆட்டோ செயலியை துவக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வேண்டும், கட்டுமான வாரியம் போல வீடு கட்ட ரூபாய் 4 லட்சம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.