பெண்ணை மிரட்டியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். இவரது மகள் ஜெயகல்யாணி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 


உடனடியாக பெங்களூரு சென்ற தம்பதியினர் இருவரும் அங்குள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக்கோரி புகார் அளித்தார் அதில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். 


இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெயகல்யாணி, அதில் தனது தந்தை சேகர்பாபுவால் கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தலைமறைவாக இருந்து வருவதாகவும் கூறினார். மேலும் கணவருக்கும், குழந்தைக்கும் ஏதாவது நடைபெற்றால் தந்தை, தாய்மாமா, காவல் ஆய்வாளர் 3 பேரும் தான் காரணம் என தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவாதம் அளித்தால் நாங்கள் தமிழ்நாட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆண்டு  புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததாகவும், இதனடிப்படையில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.