நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வந்ததால், சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றனர்.


சென்னையில் இருந்து மட்டும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் அரசுப் பேருந்துகளில் 3 நாட்களில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 541 பேர் சொந்த ஊர் சென்றனர். இவர்கள் தவிர தனியார் பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சென்றனர்.




இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் அரசு விடுமுறை அளித்ததால் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் திரும்பி வருகின்றனர். இதனால், சென்னை நகரத்தின் நுழைவுப் பகுதியான பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதனால், அப்பகுதியில் இருந்து வழக்கமாக சென்னைக்கு பணிக்கு வருபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களின் நெரிசல் அதிகரித்ததையடுத்து, காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளியன்றைய நிலவரப்படி சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்காக சுமார் 10 ஆயிரத்து 325 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது.




முன்னதாக, தீபாவளி பண்டிகைக்காக  தமிழ்நாடு முழுவதும் வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக மொத்தம் 16 ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இவற்றில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று முதல் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் வழக்கத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.