பெரம்பலூர் வி.களத்தூர் கிராமத்தின் 4 கோவில்களின் திருவிழாக்களை நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். அந்த திருவிழாக்களுக்கு தடை  விதிக்கக்கோரி 
சுன்னத் வால் ஜமாத்  வழக்கு தொடர்ந்தது. 


இந்த வழக்குகளின் மேல்முறையீடு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலம், மஞ்சள் நீர் தெளிப்பு  கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 2018ல் தனி நீதிபதி அனுமதி அளித்திருந்த நிலையில் இந்த  மனுவை விசாரித்த நீதிபதிகள், மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மைக்கு கேடு என கருத்து தெரிவித்தனர். 




விசாரணைக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள்,ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல பிறரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில் மற்றும் மத ஊர்வலங்களை அனைத்து சாலைகள், தெருக்களில் அனுமதிக்க வேண்டும்  என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் இரு தரப்பினருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.