நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

  


தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீபாவளி, பொங்கள் பண்டிகையின் போது லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் செல்ல ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிக்கைகாக ரயில்களில் மட்டும் 3 முதல் 4 லட்சம் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள்.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தீபாவளி பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று (ஜூலை 12) புக் செய்பவர்கள் நவம்பர் 9 ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளை பெற முடியும். மேலும் நவம்பர் 10 ஆம் தேதிக்க்கு நாளை (ஜூலை 13) டிக்கெட்  முன்பதிவு செய்ய வேண்டும். இதேபோல் ஜூலை 14 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்தால் நவம்பர் 11க்கான டிக்கெட்டுகளைப் பெறலாம். 


இன்று காலை 8 மணிக்கு தீபாவளி பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. சுமார் 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளுமே புக் செய்யப்பட்டது. குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை, அனந்தபுரி, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், தேஜஸ், குருவாயூர் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெயிடிங் லிஸ்ட்டில் உள்ளது. நாளை தொடங்கும் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 10 ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளாகும், அதாவது வார இறுதி நாளாக வெள்ளிக்கிழமை. நாளை அதிக அளவில் டிக்கெட் புக் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விடுமுறை நாட்களில் தீபாவளி வருவதால் கண்டிப்பாக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னதாகவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பயண நெருக்கடியை தவிர்க்க விரைந்து முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு தெற்கு ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வரும் என கூறப்படுகிறது.