நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. 


பொதுவாக பண்டிகை காலங்களில் வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு பயணப்படும் மக்கள் கூட்டத்தால் பேருந்து, ரயில் நிலையங்கள் திண்டாடும். இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாக இருந்தாலும்  டிக்கெட் கட்டணம் குறைவு, சௌகரியமான பயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள நினைப்பார்கள். 


பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் விழாக்காலங்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் மக்கள் சிரமிமின்றி பயணிக்கும் நிலை உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளிக்கான முன்பதிவானது இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை நாட்களில் பண்டிகை வருவதால் நிறைய பேர் சோகத்தில் உள்ளனர். ஆனாலும் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது சிறப்பு என்பதால் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர். 


எவ்வாறு டிக்கெட் பெறலாம்? 


ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று (ஜூலை 12) புக் செய்பவர்கள் நவம்பர் 9 ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளை பெற முடியும். மேலும் நவம்பர் 10 ஆம் தேதிக்க்கு நாளை (ஜூலை 13) டிக்கெட்  முன்பதிவு செய்ய வேண்டும். இதேபோல் ஜூலை 14 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்தால் நவம்பர் 11க்கான டிக்கெட்டுகளைப் பெறலாம். 


விடுமுறை நாட்களில் தீபாவளி வருவதால் கண்டிப்பாக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னதாகவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பயண நெருக்கடியை தவிர்க்க விரைந்து முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.