கரூர் மாநகரில் சமீபத்தில் பேருந்து நிலைய ரவுண்டானா, சர்ச் கார்னர், திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாக போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு எதிராக அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சர்ச் கார்னர் பகுதியில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் பதிவு எண்ணுக்கு அனுப்ப வேண்டிய அபராதத்திற்கு பதிலாக, வேறொரு வாகனத்தின் உரிமையாளருக்கு தவறாக அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான குறுஞ்செய்தி சென்றது. இது தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் நேற்று TN 47 AC 8673 என்ற பதிவு எண் கொண்ட வாகன உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய அபராதம் குறித்த குறுஞ்செய்தி, தவறாக திரிபுரா மாநிலம், அகர்தலாவில் இருக்கும் சோமன் என்ற நபருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி சென்றுள்ளது.
தனக்கு தவறாக அனுப்பப்பட்டுள்ள அபராதம் குறித்த குறுஞ்செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து அந்த கார் எண் என்னுடையது அல்ல என, அந்த நபர் புகார் அளித்துள்ளார். அவரின் இந்த பதிவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்