செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 11ஆம் தேதி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் "சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு" நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் இந்த மாநாடு நடைபெற்று வந்தது, இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றாமல் இருந்து வருகிறது.
இந்தநிலையில் பாமகவின் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ், தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, வன்னியர் சங்க மாநாடு நடத்த பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட காஞ்சிபுரத்தில் வன்னியர் சங்கம் மாநாடு நடத்துவதற்கான, இடத்தைக் கூட தேர்வு செய்யப்பட்டது.
வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு
ஆனால் கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களால் அந்த மாநாடு நடைபெறாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறுவது, அரசியல் அரங்கில் கவனத்தை பெற்றுள்ளது. வன்னியர் சங்க மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக செல்ல அறிவுறுத்தல். மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது காவல்துறை அறிவித்துள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்களை எழுப்ப கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்
இந்தநிலையில் நேற்று பொதுமக்களுக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், மாநாட்டின் நோக்கங்கள் குறித்து எடுத்துக் கூறியிருந்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள் என பேச தொடங்கியவர், "மாநாடு நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு தகவலை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர்ஐ பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து நெருப்பு ஏற்ப்பட்டால் மன்னிக்க வேண்டும், இந்த மாநாடு சமூகநீதிக்கான மாநாடு என்பதால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கையுடன் அந்த வீடியோவை வெளியிட்டிருப்பது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தவெக மாநாடு VS பாமக மாநாடு
தமிழ்நாட்டில் அனைத்து கட்சி மாநாடுகள் நடைபெறும் போதும், இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அக்கட்சியின் தலைவர்கள் நேரடியாக இதுபோன்ற, வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களிடம், ஆதரவு மற்றும் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் மன்னிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கும் வீடியோ, வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெற்ற போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அப்போது விஜய் இது குறித்து பொதுமக்கள் இடையே எந்தவித மன்னிப்போ, ஆதரவையோ கேட்கவில்லை, அதைக் குறிப்பிட்டு விஜய் செய்யாததை, அன்புமணி செய்துள்ளார் என ஒரு சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் எதிர்மறை கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.