வேளாண் நிதிநிலை அறிக்கை : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அறிக்கை வெளியிட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு, இன்று தாக்கல் செய்துள்ளது. மூன்றாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.
கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு, நெல்லுக்கு பின்னான் பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம், சம்பா நெல் அறுவடைக்குப் பின்னர் * சிறுதானியங்கள் பயறு உள்ளிட்ட சாகுபடிகள் ஊக்குவிப்பு போன்றவை விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்கள் ஆகும்.
60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு, ஆதிதிராவிட, பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 விழுக்காடு மானியம், மின்னணு வேளாண்மை திட்டம் அறிமுகம், தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் வரவேற்கதக்கது.
பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியத்திற்கு ரூ.2337 கோடி நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.
நன்றி:
கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும், குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு, சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள், கரும்பு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கிறது.
பண்ருட்டியில் பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது.
அக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
கருவேப்பிலை சாகுபடி:
கோவை மாவட்டத்தில், கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில், 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு, தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம், ராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கதக்க திட்டங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடியவை என்பதை அறிந்து, 1000 ஹெக்டேரில் செளசெள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக இந்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நுண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53, 400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு, முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஹெக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகள், வேளாண்மையை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களாகும்.
சாகுபடி பணிகளை காலத்தில் மேற்கொள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர்க்கடன், விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள், காவிரி டெல்டா பகுதியில் திருச்சி – நாகை இடையில் வேளாண் தொழில் பெருந்தடம்’ அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மறுகட்டமைப்பு, பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாகும்.
கொள்முதல் விலை:
அதே நேரத்தில், வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடோ, வேலைவாய்ப்போ, மாற்று இடமோ வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது வேதனையை ஏற்படுத்துகிறது.
மேலும், கரும்புக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அது, மூன்றாவது நிதிநிலை அறிக்கையிலும் நிறைவேற்றவில்லை.
அதேபோன்று, நெல்லுக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை என்பது, யானை பசிக்கு சோளப்பொறி போன்றது தான்.
ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் நிலைய வளாகங்களில் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் நெல் மழையில் நனைந்து வீணாகும் சூழலில், அதைத் தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் வேளாண்மை தான் முதன்மை தொழில் என்பது கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையின் மதிப்பை உயர்த்த, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.” என தெரிவித்திருந்தார்.