தைப்பொங்கலுக்கு தயாராகும் பனங்கிழங்கு : தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெள்ளை மற்றும் வர்ணம் பூசி சுத்தம் செய்து பயன்படாமல் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்தி புதிய பொருட்களை வீடுகளில் வைத்து அலங்கரிப்பார்கள். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் கதிர்களுக்கு தைப்பொங்கலன்று  பொங்கலிட்டு வழிபட்டு அறுவடை பணியை துவக்குவார்கள். தவிர மக்கள் வீடுகளுக்கு முன்பு பொங்கலிட்டு, மஞ்சள் குலை , பனங்கிழங்கு ஆகியவற்றை வைத்து சூரியனை வழிபட்டு நோய் நொடியின்றி அனைவரும் நலத்துடனும் செல்வத்துடனும் வாழ இயற்கை அன்னை துணைபுரிய வேன்டியும் வழிபாடு செய்வார்கள். பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவகுணமுள்ள பொருளாகும். பனை மரம் அடி முதல் நுனி வரை அனைத்தும் பயன் தரக்கூடியது என்பதால் பனை விதையில் முளைக்கும் பனங்கிழங்கு தைப்பொங்கலன்று முக்கியத்துவம் பெறுகிறது. 




பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நல்ல விளைச்சல் இருந்தும் ஓமிக்காரன், கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக பனங்கிழங்கினை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருவதாக பனைத்தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்






 

பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம் பழமாகிவிடும். மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். 3 மாதத்தில் பனங்கிழங்கு விளைந்து அறுவடைக்கு தயராகி விடுவது வழக்கம். செம்மண், களிமண் மற்றும் மணற்பாங்கான இடங்களில் அதிகளவில் பனங்கிழங்கு பயிரிடப்படுகிறது. மணற்பாங்கான இடங்களில் விளையும் பனங்கிழங்கு நல்ல திரட்சி மற்றும் ரூசியாக இருப்பது அவ்வகை பனங்கிழங்குகளை மக்கள் அதிகமாக விரும்பவது இயற்கை. அந்த வகையில் கோவில்பட்டி அருகே வைப்பாற்று கரையோரம் உள்ள மணற்பாங்கான இடத்தில் விளையும் பனங்கிழங்கிற்கு நல்ல மவுசு உண்டு.



 

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்று பகுதியில் கரையோரங்களில் உள்ள பகுதியில் சுமார் ஒரு லட்சம் பனை மரங்கள் உள்ளன. இதில் அயன்வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழ்நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் பனை தொழிலாளர்கள், விவசாயிகள் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பனங்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்குகள் கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், மதுரை நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் பனங்கிழங்குகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல பனங்கிழங்கு சாகுபடி செய்து இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பனங்கிழங்கு விற்பனை பாதிக்கப்பட்டு இருந்தது.

 

கடந்த ஆண்டை விட இந்தாண்டு பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக இருந்த காரணத்தினால் பனைத்தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். பொங்கல் பண்டிகைக்கு சில தினங்கள் உள்ள நிலையில் தற்பொழுது விறுவிறுப்பாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு போல இந்தாண்டும்  25 கிழங்கு கொண்ட கட்டு 100 ரூபாய்க்கும், 50 கிழங்கு கொண்ட கட்டு 200 ரூபாய்க்கும், 100 கிழங்கு கொண்ட கட்டு 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக டிசம்பர் கடைசி முதல் ஜனவரி முதல் வாரத்திற்குள் அறுவடை முடிவடைந்து விற்பனை நடைபெற்று விடும். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக வெளியூர் வியாபாரிகள் பனங்கிழங்கு கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். உள்ளுர் வியாபாரிகள் மட்டும் தற்பொழுது கொள்முதல் செய்து வருகின்றனர். பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் பனைத்தொழிலாளர்கள் உள்ளனர். தமிழக அரசு பொங்கல் பரிசுவுடன் கரும்பு வழங்குவது போல பனங்கிழங்கினையும் பனைத்தொழிலாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வழங்கினால் தங்களுடைய வாழ்வாதரம் செழிக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.