ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக நாள் தோறும் இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்தாண்டின் முதல் முழுநாள் ஊரடங்கு ஞாயிற்று கிழமையான நேற்றையதினம் அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, குடவாசல், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகளில் பொது போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் சில இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறையை மீறி சாலையில் சுற்றி திரிந்தனர். உரிய காரணங்கள் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர். போலீசார் வாகன சோதனையில் திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா என காவல்துறையினர் சோதனை செய்து பின் அனுப்பி வைத்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினர்.
இதனை அடுத்து கொரோனா ஒமிக்ரான் பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட எல்லைகளில் 30 சோதனைச் சாவடிகள் 40 நிலையான ரோந்துகள், 34 இருசக்கர வாகன ரோந்துகள், 5 நெடுஞ்சாலை ரோந்துகள் அமைத்து மாவட்டம் முழுவதும் தொடர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் சுமார் 600 காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் அரசின் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் தன் குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் முக்கவசம் அணியாமல் காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்த 147 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊரடங்கு அறிவிக்கும் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அரசின் உத்தரவை அமல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும், மேலும் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் இதனை தொடர்ந்து இனிவரும் ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவை மீறி வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை செய்துள்ளார்.