தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையறை பணிக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்தத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மாதம் 14-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் ஆணையர் பழனிகுமார், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். அதேபோல மீதமுள்ள மாவட்டங்களில் காலியாக இருக்கும் 789 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலும் 9-ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி, மொத்தம் 27,791 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவு, வேட்புமனுக்கள் பரிசீலனை, சின்னம் ஒதுக்குதல், பிரசாரம் என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடுபிடித்து வந்தது. ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றன. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற இருக்கும் தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை, வாக்குச்சாவடி அலுவலர்களின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான 13 வகையான பொருள்களைச் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பணிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களும் தமது கட்சி தொண்டர்கள் மற்றும் பூத் அசிஸ்டண்ட்களுடன் சேர்ந்து வாக்குச்சாவடிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்ற நிலையில் பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் உயிரிழந்ததாக செய்திகள் வந்துள்ளன.



அரக்கோணம் அருகே பள்ளூர் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணி என்னும் அறுபது வயதுடயவர் இறந்துள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இன்று இறந்ததால் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளூர் தொகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


 


மேலும் இன்றைய முக்கிய செய்திகளுக்கு...