பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடப்பதாகவும் அறிவியல் பின்னணியில் இருந்து பெரு நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்கள், அழுத்தப்படும் மக்கள் குறித்து ஆராய வேண்டும் எனவும் ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழா மேடையில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணா வேதனை தெரிவித்துள்ளார்.
பிஎச்டி பட்டத்தைப் பெற்ற இஸ்ரோ தலைவர் சோமநாத்
ஐஐடி சென்னையின் 61ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 19) சென்னையில் நடைபெற்றது. வேதியியல் துறையில் 2012ஆம் ஆண்டு நோபர் பரிசு பெற்ற முனைவர் ப்ரியன் கோபில்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் இஸ்ரோ தலைவர் சோமநாத், மெக்கானிக்கல் பொறியியல் படிப்பில் பிஎச்டி பட்டத்தைப் பெற்றார். இவர் உள்ளிட்ட 2,636 மாணவர்கள் தங்களின் பட்டங்களைப் பெற்றனர். மொத்தம் 3,016 பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவில், கல்விசார் மற்றும் கல்விசாரா இணைச் செயல்பாடுகளில் ஆல் ரவுண்டராக விளங்கியமைக்காக ஆளுநர் விருதை, மெக்கானிக்கல் பொறியியல் மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணா பெற்றார். தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
’’இது செயல்பாட்டுக்கான நேரம். பாலஸ்தீனத்தில் திரளான இனப் படுகொலை நடக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் இறக்கிறார்கள். இதற்கு வெளிப்படையான முடிவு எதுவுமில்லை. இதுகுறித்து நாமெல்லாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?
பாலஸ்தீன போரில் சம்பந்தப்பட்டுள்ள பெரு நிறுவனங்கள்
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் மட்ட அளவில் வேலை பெற பொறியியல் மாணவர்களாகிய நாம், கடினமாக உழைக்கிறோம். நல்ல சம்பளம் பெறவும் பிற லாபங்களுக்காகவும் இதைச் செய்கிறோம். இத்தகைய பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலஸ்தீன போரில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. பாலஸ்தீனர்களைக் கொல்ல தொழில்நுட்பங்களைக் கொடுக்கின்றன.
இதைத் தடுக்கும் வழி எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பொறியியல் பட்டதாரிகளான நமக்கு, நாம் செய்யும் பணிகளின் விளைவுகள் தெரியும். ஸ்டெம் (STEM) பின்புலத்தில் இருந்து பெரு நிறுவனங்கள் செல்லும் நாம், சாதி, வர்க்கம், நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றால் நசுக்கப்படும் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய வேண்டும். இது என்றுமே முடியாத சுழற்சியைத் தடுக்கும் முதல் படியாக இருக்கும் என்று நம்புகிறேன்’’.
இவ்வாறு மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணா தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் கரகோஷம் வானைப் பிளந்தது.