பழனி முருகன் கோயிலில் தைப் பூசத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் எங்கு இருந்தாலும் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளும் படி இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி வீட்டில் இருந்தே பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.
வீட்டுக்கே பழனி பிரசாதம்:
அதில், "விரைவு அஞ்சல் சேவை" என்ற பெயரில் தைப்பூசத்திற்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி பிரசாதத்தை பெற ரூ.250 செலுத்தி, அருகில் உள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பிறகு வீட்டு வாசலுக்கே பிரசாதம் டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி வீட்டில் இருந்தே பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.
அதில், "விரைவு அஞ்சல் சேவை" என்ற பெயரில் தைப்பூசத்திற்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி பிரசாதத்தை பெற ரூ.250 செலுத்தி, அருகில் உள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பிறகு வீட்டு வாசலுக்கே பிரசாதம் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச வரலாறு:
சிவ பெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் சிவ பெருமான் அரங்கேற்றினார். இந்த நடனத்தை பார்வதி தேவியும் ரசித்துக் கொண்டிருந்தார். சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்ட சிவகாமிக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர்.
முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும். சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என கொண்டாடப்பட்டது. அதனால் இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக மாறியது. இந்த நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம் பழனி தான்.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், கைலாச நாதருடன் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறாள். இக்கோவிலில் சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. கோவிலின் பிரதான தெய்வமாக பெரியநாயகி அம்மனும், சிவனும் இருந்தாலும், பிரதான வாசல் மற்றும் கொடிமரம் ஆகியன முருகன் சன்னதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளன. கோவிலுக்குள் வரும் போது முதலில் முருகனை தரிசித்த பிறகே அம்பாள் மற்றும் சிவனை தரிசிக்க முடியும்.
தைப்பூசத்துக்கு சிறப்பு ரயில்கள்
தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல், கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 5 நாட்கள் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, மதுரை, பழனி இடையே இயக்கப்படும் ரயில் வண்டி எண் 06080 மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரயில் வண்டி எண் 06079 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.
இதேபோல் கோவை, திண்டுக்கல் ரயில் எண் 06077 காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06078 மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.