பழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி உலகப் புகழ் பெற்றது. இங்கு தண்டாயுதபாணியாக முருகன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எப்போதும் உள்ளூர், வெளியூர் பக்தர்களால் நிரம்பி வழியும் பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேக விழாவை காண முன்பதிவு செய்த 51 ஆயிரம் பக்தர்களில் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மலைக்கோயிலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற பக்தர்கள் விழாவை காண வசதியாக மலை அடிவாரம் தொடங்கி பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட காலை 8 மணிக்கு கோயிலின் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்ட நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோயில் கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
பழனி கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் பழனி கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம் படிப்பாதை, கிரிவல வீதியில் உள்ள கடம்பன், இடும்பன், மயில்கள், அகஸ்தியர் உள்ளிட்ட கோயில்களில் நன்னீராட்டு விழா நடந்தது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 11 மணி முதல் வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் இன்று மாலை வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகருக்கு திருக்கல்யாண வைபவமும், தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதுரை முதல் பழனிக்கும் மற்றும் திண்டுக்கல் முதல் கோவை வரை பழனி வழியே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.