திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள்  கூட்டமாக தாக்கும்  வீடியோ பரபரப்பு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பின்னலாடை நிறுவனங்களில்  ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட  வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கும்பல் கும்பலாகவும் குடும்பம் குடும்பமாகவும் பணி செய்து வருகின்றனர்.  இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில்  திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைக் கடந்து அதன் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பணி புரிந்து வருகிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை விடவும் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம்   செல்லும் சாலையில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும்  வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை பெல்ட், கட்டை,  உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிகடையில், சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளரை தாக்கியுள்ளனர்.  இதனால் பதில் தாக்குதல் நடத்திய  வட மாநில தொழிலாளர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தமிழ்நாட்டு தொழிலார்களை தாக்கியுள்ளனர்.  தொடர்ந்து இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிகொண்டதில் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.