Palani Kumbabishekam 2023 LIVE: பழனி முருகனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு
Palani Kumbabishekam 2023: பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே காணலாம்
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் - 11 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் காத்திருப்பு
கங்கை, காவிரி, சண்முக நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கோபுர தங்க கலசங்கள் மீது ஊற்றப்பட்டது - 8 இடங்களில் கும்பாபிஷேக நன்னீரை பக்தர்கள் மீது தெளிக்க கருவிகள் வைக்கப்பட்டுள்ளது
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் ஊற்றும் போது கோபுரத்தின் மீது மலர் தூவ ஹெலிகாப்டர் வருகை - பக்தர்கள் கூட்டத்தால் பழனி எங்கும் விழாக்கோலம்
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஹெலிகேம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு - பழனி நகரம் முழுவதும் 300 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். எங்கு திரும்பினாலும் அரோகரா..அரோகரா என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம்...
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இறைச்சி கடைகள் மூடல் - விதிகளை மீறி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை மலைக்கோயிலில் காண 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட நிலையில் படிப்பாதை மூடப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதால் அசம்பாவிதம் நடைபெறுவதை தவிர்க்க பழனியில் டிரோன்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு
ஒட்டன்சத்திரத்தில் இருந்து கார்களில் பழனி வரக்கூடிய பக்தர்களுக்கு கொடைக்கானல் பைபாஸ் பிரிவு, கோவில் சுற்றுலா பஸ்நிலையம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை பகுதியில் இருந்து பழனி வரும் கார்கள், சண்முகநதி பைபாஸ், பாலசமுத்திரம் சந்திப்பு வழியே கோசாலை பார்க்கிங் மற்றும் கார்த்தி பள்ளி வளாகத்தில் வாகன நிறுத்தம் வசதி செய்யப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு வசதியாக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
Background
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி உலகப் புகழ் பெற்றது. இங்கு தண்டாயுதபாணியாக முருகன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எப்போதும் உள்ளூர், வெளியூர் பக்தர்களால் நிரம்பி வழியும் பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவுக்கான பூஜைகள் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றது. குடமுழுக்கு விழாவை காண முன்பதிவு செய்த 51 ஆயிரம் பக்தர்களில் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மலைக்கோயிலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற பக்தர்கள் விழாவை காண வசதியாக மலை அடிவாரம் தொடங்கி பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட காலை 8 மணிக்கு கோயிலின் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டன் நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோயில் கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
பழனி குடமுழுக்கு விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் பழனி குடமுழுக்கு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம் படிப்பாதை, கிரிவல வீதியில் உள்ள கடம்பன், இடும்பன், மயில்கள், அகஸ்தியர் உள்ளிட்ட கோயில்களில் நன்னீராட்டு விழா நடந்தது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு முடிந்த பின்னர் காலை 11 மணி முதல் வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் இன்று மாலை வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகருக்கு திருக்கல்யாண வைபவமும், தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மதுரை முதல் பழனிக்கும் மற்றும் திண்டுக்கல் முதல் கோவை வரை பழனி வழியே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -