மணிப்பூர் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய புகாரில் கைது செய்யப்பட்ட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் கிழக்கு பதிப்பகம் நடத்தி வரும் பத்ரி சேஷாத்ரி அண்மையில் யுடியூப் சேனலில் பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையானது. நாடே கொந்தளித்த மணிப்பூர் கலவரம் குறித்து பேசிய அவர், சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மணிப்பூரில் இரு பெண்களை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார். 


தலைமை நீதிபதியின் இந்த கருத்தை விமர்சித்த பத்ரி சேஷாத்ரி, தலைமை நீதிபதி சந்திரசூட் கையில் துப்பாக்கி கொடுத்து மணிப்பூர் அனுப்பலாமா என்ற வகையில் சர்ச்சையாக பேசினார். அவரது நேர்க்காணலை பார்த்த பெரும்பலூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு, பத்ரி சேஷாத்ரி மீது புகார் அளித்தார். அதாவது, வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைவிமர்சித்தும், பத்ரி சேஷாத்ரி பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குன்னம் போலீசார் கடந்த 29-ஆம் தேதி பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர். 


இந்த நிலையில் பத்ரி சேஷாத்ரியை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி பத்ரி சேஷாத்ரி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி கவிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 


மனுக்களை விசாரித்த நீதிபதி, பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நிபந்தனை அடிப்படையில் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை ஸ்ரீரங்கத்தில் தங்கி அங்குள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பத்ரி சேஷாத்ரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


முன்னதாக பத்ரி சேஷாத்ரியின் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். பாஜகவுக்கு ஆதரவாக பத்ரி சேஷாத்ரியின் கருத்து இருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.