இது தொடர்பாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவெறுக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் அந்த பள்ளிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சென்னை கேகேநகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஒரு ஆசிரியர் தனது வகுப்பின் பெண் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக செய்திகளை சமூகவலைதளங்களில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். புகழ்பெற்ற மீடியா ஒன்று இந்த சம்பவம் தொடர்பாக என்னிடம் விளக்கங்களைக் கேட்கிறது. டீன் மற்றும் நிர்வாகத்திடம் முறையிட்டதாகவும், எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர்கள் கூறும்போது, இதுபோன்ற ஒரு விஷயத்தை நாம் யாரும் மதிப்பிடவில்லை.
பள்ளியில் அன்றாட நிகழ்வுகள் குறிப்பிட்ட பள்ளி கிளையின் டீன் மற்றும் அதிபரின் கீழ் வருகின்றன. அவரது விஷயத்தில் விசாரணை நடத்தி, விஷயத்தின் உண்மையை ஆராய வேண்டியது உங்கள் கடமை. ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, “பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை. நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டிதான். இந்த புகார் பார்த்ததுமே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். முழுக்க முழுக்க இந்த பள்ளியின் நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வது எனது தம்பி மனைவியும், தம்பியும்தான்” என்று Abp நாடு செய்தி நிறுவனத்திற்கு ஒய். ஜி. மகேந்திரன் தகவல் கூறினார்.