கோடை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மழை விட்டாலும் இனி தங்களது நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வாய்ப்பில்லை எனவும், இதனால் தாங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் மதுரை மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.

 

 

 



 

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், அலங்காநல்லூர், மேலூர், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கிழக்கு,  மேற்கு என பல்வேறு பகுதிகள் நெல் விவசாயம் அதிகளவு செய்யப்படுகிறது. இந்நிலையில் களிமங்கலம்,ஓவலூர், குன்னத்தூர் ஆகிய கிராமங்களில்  கோடை மழையால் பல ஏக்கர் நெல் நாசமானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 ஒரு சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் அப்பகுதியில் சுமார்  நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் நிலத்தோடு நிலமாக சாய்ந்து எவ்வித பயனும் இன்றி வீணானதாக தெரிவிக்கின்றனர். விவாசய நிலத்தில் உள்ள நெல் மற்றும் வைக்கோல் எவ்வித பயனின்றி இருப்பதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து, என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். எனவே நஷ்டமடைந்த விவசாய நிலத்திற்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 



 

ஓவாலூரைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர்...." பருவம் தவறி வெவசாயம் செஞ்சுபுட்டோம். கோடை மழைக்கு பயிருகபூரா படுத்துருச்சு. சம்சாரிக என்ன பன்னபோறமுனு தெரியல. எங்க பிள்ளகுட்டிகளும் ஏசுதுக..' எதுக்கு வெள்ளாமை போட்டேனு'.  நகை எல்லாம் கூட்டுறவு பேங்குலதே அடகுல இருக்கு எப்புடி திருப்பபோறம்னு தெரியல. குத்தக வாங்கி தான் நட்டோம். நிலத்துக்காரங்களுக்கு 8 மூடையாச்சும் கொடுக்கனும் அதுவும் குடுக்க முடியல. மிஞ்சுன நெல்ல மூட்ட 300க்கு தான் போகும், 350 ரூவாய்க்கு தான் போகும்னு அடிமாட்டு வெல பேசுராங்க. அரசாங்கம் தான் கண்ண தொறக்கனும்" என்றார் வேதனையாக.

 

 

மற்றொரு விவசாயி...." பயிருக கீழ சாஞ்சு, கதிர்  எல்லாம் சேத்துல சிக்கி மண்ணோடு மண்ணா கிடந்து, முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. கோடை மழை விட்டாலும், நெல்லை அறுவடை செய்ய முடியாது.  உழைப்பு இப்படி வீணாப்போயிடுச்சு. என மிகுந்த வேதனையோடு தெரிவிக்கனர்.

 

 



 

 

 களிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹக்கிம்..., "உழவு, நாற்று உற்பத்தி, நாற்று பறிப்பு, நடவு, களையெடுப்பு, இடுபொருள்களுக்குனு விவசாயிகள் இதுவரைக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கோம். கீழ சாஞ்சி கிடக்குற நெல்லை, இனி அறுத்தெடுக்க வாய்ப்பே இல்லை. முளைக்காம மிச்சமிருக்குற நெற்கதிர்களை ஒருவேளை அறுவடை செஞ்சாலும் கூட, நெல்மணிகள் கீழ உதிர்ந்துடும். எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணி காலதாமதாம வந்து சேந்துச்சு. அதனால பருவம் மாறிடுச்சு. கோடை மழையில சிக்கியதால் இப்ப சாய்ந்து முளைக்குது. இது நெல் காப்பீடல வராது அதனால அதிகாரிகள் நிவாரணம் தர வாய்ப்புள்ளேனு சொல்ராங்க. எனவே அரசு விவசாயிகளின் சூழலை உணர்ந்து உதவி செய்யனும்" என்றார்.

 

 



 

 

சமூக ஆர்வலர் சிலர்...," காப்பீடு இல்ல, இது காலம் கடந்த விவசாயம்னு பிரித்து பார்க்காமல் அரசு உதவி செய்யனும். கொரோனா இரண்டாவது அலையில் இருக்கும் போது விவசாயிகளுக்கு வேற வாழ்தாரம் இல்லை. எனவே அரசு இதனை பரிசீலனை செய்யனும். மதுரை மாவட்டத்தில் இதைப்போல் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுருக்கு எனவே விவசாயிகள் செலவு செஞ்ச தொகையை மட்டும் நிவாரணமாக வழங்காமல், இதில் கிடைக்க இருந்த லாபத்துல ஒரு பகுதியையும் சேர்த்து, ஏக்கருக்கு 50,000 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கணும். விவசாயிகளோட 5-  ஆறு மாச உழைப்பும் விவசாயிகளோட வாழ்வாதாரமும் இதுல அடங்கியிருக்கு. நெல்லு மட்டுமல்ல... உளுந்து, நிலக்கடலை, துவரை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் மழையில பாதிக்கப்பட்டிருக்கு. அதுக்கும் உரிய இழப்பீடு வழங்கணும்’’ எனத் தெரிவித்தனர்.


 

அரசு ஆதரவுக்கரம் நீட்டுமா... பொறுத்திருந்து பார்க்கலாம்!