புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "ஆலங்குடி, திருமயத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பான டெண்டருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளேன். எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமயத்தில் புதிய நூலக கட்டிடம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் கட்டுவதற்க்கு 1.25 லட்சம் மதிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.


"சம்மந்தமே இல்லாத கேள்விகள்”


பின்னர், நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால் எளிதாக வெல்ல முடியும் நீங்கள் சொல்லி இருந்தீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு, ”திருமயத்தில் பதில் சொல்வதாகவும், இன்றைக்கு பேச வந்தது வேறு. ஆனால் நீங்கள் என்னமோ கேட்கிறீர்கள்" என்று பதிலளித்துள்ளார். 


மேலும் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ”சம்மந்தமே  இல்லை...சம்மந்தமே இல்லாத கேள்விகள் கேட்கின்றனர்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.


”நிதியை கொடுப்பதும் ரத்து செய்வதும் மத்திய அரசு தான்"


இதனை தொடர்ந்து பேசிய அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான தேவைகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதி  ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி அதிகரிக்க வேண்டும் என்பதோடு கொடுக்கின்ற நிதி குறைக்காமல் இருந்தாலே போதும்.  நிதியை கொடுப்பதும் அவர்கள் தான், நிதியை  ரத்து செய்வதும் மத்திய அரசு தான்" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


செங்கோல் விவகாரம் - புனைக் கதைகள்


”செங்கோல் விவகாரத்தில் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு, மற்றவை எல்லாம் புனையப்படுவது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் அங்கு நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது. செங்கோல் பற்றி நேற்று வட ஆளுநர் ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.


திருவாடுதுறை ஆதினம் 1947ல் விமானத்தில் செல்லவில்லை, ரயிலில் சென்றுதான் நேருவிடம் செங்கோல் வழங்கினார். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நேருவுக்கு செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நேருவுக்கு செங்கோல் உள்பட ஏராளமான பரிசுகள் வந்தன. அவை அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தங்க செங்கோல் என்று தான் உள்ளது. வாக்கிங் ஸ்டிக் என்று அதில் குறிப்பிடவில்லை” என்றார் ப.சிதம்பரம்


”மணிப்பூர் மக்களுக்கு நீதி வேண்டும்"


தொடர்ந்து பேசிய அவர், ”இதுதான் நடந்தது. இந்த விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியதுவம் தரத் தேவையில்லை. இதில் நடக்காததை எல்லாம் சொல்வது வேடிக்கையாக உள்ளது.  மணிப்பூர் கலவர களத்தில் இருந்து பிரதமர் ஒதுங்கி இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது. மல்யுத்த வீரர்கள் முப்பது நாட்களாக கோரிக்கை வலியுறுத்தி போராடுகிறார்கள் அவர்களை அழைத்து பேசாமல் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.