மதுரையை சேர்ந்த முகமது ரபிக் (எ) ஆதம் பாவா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் ஆன்டி இந்தியன், தப்பாட்டம் போன்ற படங்களின் தயாரிப்பாளர். மேலும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். என் மீது 1995 ஆம் ஆண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு என் மீதான வழக்கு நீக்கப்பட்டது. அதன் பின்பு 25 வருடங்களாக எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை.

 



 

ஆனால் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ரவுடிகள் பெயர் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை நீக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருந்து  எனது பெயரை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 



 


அனைத்து விஷயங்களிலும் நீதிமன்றம் தலையிட முடியாது - ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த கோரிய வழக்கில் நீதிமன்றம் கருத்து 

 

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன் சார்பில் அவரது வழக்கறிஞர்  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார். கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன.

 

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த மாணவர்கள் எளிதாக எளிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும்" என முறையீடு செய்யப்பட்டது.

 

அதற்கு நீதிபதிகள், இன்று மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து விசயங்களிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆகவே மனுவாக தாக்கல் செய்யுங்கள். தேவைப்பட்டால்,  வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படும் தெரிவித்தனர்.