OPS vs EPS: தர்மம்  உண்மை என்னிடம் இருக்கிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்படாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.


இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர்ந்து செயல்படலாம் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றே தமிழ்நாடு அரசு செயல்பட்டது. எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதேபோல், எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்கும். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர். 


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாராணப் பொருட்களை சேலத்தில் வழங்கி விட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தர்மம்  என்னிடம் இருக்கிறது,  உண்மை என்னிடம் இருக்கிறது, நீதி என்னிடம் இருக்கிறது.  உச்சநீதி மன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் பொறுப்பாளர் புகழேந்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, புகழேந்தி யார்? அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வந்தவர். கட்சிக்கு துரோகம் செய்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். யாரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பதெல்லாம் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.