தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, மூன்றாவது கூட்டணியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது கூட்டணி?
அரசியல் சதுரங்கத்தில், கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்று சொல்லி பாஜகவுக்கு செக் வைத்துள்ளார் எடப்பாடி. பா.ஜ.க.வின் டெல்லி தலைமையோ தனது அடுத்தகட்ட அதிரடி காய்நகர்த்தலுக்கு ஆயத்தமாகிவிட்டது. அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைத்து தோல்வியடைந்த ஓ.பி.எஸ், அதே முயற்சியில் ஏற்கனவே தோற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நடத்தி வரும் டி.டி.வி தினகரன் ஆகியோரை டெல்லிக்கு வரும்படி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
பட்டாபிஷேகமோ – படுதோல்வியா?
கடந்த 2 தசாப்தங்களில் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் தனது அடிப்படை வாக்கு வங்கியான 25 முதல் 30 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்ததில்லை. அந்த அளவுக்கு அடிப்படை கட்டமைப்பில் அக்கட்சி பலத்தோடு இருப்பதற்கு மேற்கே கொங்கு கவுண்டர் சமூகம் மற்றும் தெற்கே முக்குலத்தோர் சமூக வாக்குகள் மிக முக்கியமானவை. இதைத்தான் தற்போது உடைக்கப் பார்க்கிறது பா.ஜ.க.
ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுகவின் முக்குலத்தோர் முகமாக வலம் வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஓபி.எஸ். அவரையும், அதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவரான டிடிவி தினகரனையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று எடப்பாடியிடம் பலமுறை கேட்டுள்ளது பா.ஜ.க. தலைமை. இதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்தது கருத்து வேறுபாட்டுக்கும், கூட்டணி முறிவுக்கும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது அவர்களை வைத்தே EPSக்கு ஆட்டம் காட்டும் முயற்சியாகவே டெல்லி பேச்சுவார்த்தை அழைப்பைப் பார்க்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தால், பல சிறிய கட்சிகளை இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது.
குறிவைக்கப்படும் தென் தமிழகம்:
குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பிரதிபலிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் மற்றொரு பிரதிநிதியாக அறியப்படும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பாஜக பக்கம் பலமாக நிற்கின்றன. ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை உள்ளடகிய தென் தமிழகத்தில் இவர்களுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.
முக்குலத்தோர் சமூக வாக்குகளோடு இவர்கள் சேரும் போது தென் தமிழகத்தில் மாஸ் காட்டலாம் என்பது அமித் ஷாவின் கணக்கு. எந்தப் பக்கம் சாய்வார்கள் என்று தெரியாத மதில் மேல் பூனைகளாக பாமகவும், தேமுதிகவும் உள்ளனர். இவர்களை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கும்.
சாதிய கூட்டணி:
ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சியும், திமுக ஆதரவில் இருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவளித்து வரும் பாரிவேந்தரின் IJK - வும் கூட்டணிக்கான பண பலத்தை அதிகரிக்கும். மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால், கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களாக இருப்பார்கள். பாஜக இதுவரை மற்ற மாநிலங்களில் அமைத்திருந்த ஜாதிய அமைப்புகளை ஒன்றினைக்கும் அதே பாணியை பின்பற்றி இவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.
மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வியூகம் வெற்றி பெற்றாலும், தமிழக மக்களிடையே அது எடுபடுமா? என்பது கேள்விக்குறியே என்றாலும் பாஜகவின் மெகா கூட்டணி முயற்சிக்கு OPS – TTV உடனான டெல்லி பேச்சுவார்த்தை நல்ல தொடக்கம் தான். இதனால், தமிழக்கத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.