OPS Statement: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு - "காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10,000 காலிப் பணியிடங்கள்கூட நிரப்பப்படவில்லை. இது அரசுப் பணியை எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தொகுதி-4, தொகுதி-2, தொகுதி-2A, தொகுதி-1 ஆகியவற்றில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, இரண்டு, மூன்று ஆண்டுகள் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022 ஆம் ஆண்டு தொகுதி-4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு 24-07-2022 அன்று நடைபெற்று, மிகப் பெரிய இழுபறிக்கு பின்னர் 24-03-2022 அன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், 10,117 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலும் 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தி.மு.க.வே 2021 ஆம் ஆண்டு குறிப்பிட்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இன்றைய நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4.5 இலட்சமாக உயர்ந்துள்ளது. இன்று அனைத்துத் துறைகளிலும் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைப் பளுவை சமாளிக்க பல துறைகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் பணியாளர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அரசுப் அளவிலேயே உள்ளனர். தொகுதி-4ல் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்கள் பெரும்பாலான துறைகளில் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையே சுமார் ஒரு இலட்சம் இருக்கின்ற நிலையில், 2022ஆம் ஆண்டு போட்டித் தேர்வின்மூலம் 10,117 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது இளைஞர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான தொகுதி-4 போட்டித் தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான காலிப் பணியிடங்களை ஆண்டுக்காண்டு நிரப்பாமல், தொகுப்பூதிய அடிப்படையிலேயே அரசுப் பணிகளை மேற்கொண்டு, செலவை மிச்சப்படுத்தலாம் என்று தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.

எனவே, தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் தேர்வு நடத்தப்படாதது மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தியும், 2022 ஆம் ஆண்டு தொகுதி-4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 15,000 காலிப் பணியிடங்களை நிரப்பவும், 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வை இந்த ஆண்டே நடத்தி அதன்மூலம் 50,000 காலிப் பணியிடங்களை நிரப்பவும், இனி வருங்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களை நிரப்பவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

Continues below advertisement