தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியது. இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைத்த நிலையில் கத்திரி வெயில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை:


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கரூர் பரமத்தியில் – 39 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் – 38.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 38.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் – 38.2 டிகிரி செல்சியஸ், நாகையில் – 38 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 37.8 டிகிரி செல்சியஸ், சேலம் – 37.6 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. ஆனால் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.


31.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


01.06.2023 மற்றும் 02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


03.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.