தேர்தல் ஆணையமும் நீதிமன்ற தீர்ப்புகளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில் அரசியல் களத்தில் தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் இன்று ஓ.பன்னீர் செல்வம் மாநாட்டை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், “திருச்சி மாநாடு அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்று தீர்மானிக்க கூடிய ஒரு இடம். மாநாடு நடத்தும் இடமான ஜி.கார்னர் இடம் ரொம்ப ராசியான இடம். இந்த இடம் தான் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு அடிதளம் போட்டது. 


அதிமுக தொண்டர்களை ஒன்று இணைக்கும் தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் நமது தர்மயுத்தம் தொடக்கம். அதிமுகவை அழிக்க எடப்பாடி. பழனிச்சாமியின் நம்பிக்கை துரோகத்திற்கு சாவு மணி அடிக்க நீங்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். தொண்டர்களுக்காக நான் எவ்வளவு பெரிய தியாகம் கூட செய்ய தயார். அடுத்து அமைய போது ஜெயலலிதா ஆட்சியாக தான் இருக்க வேண்டும். இந்த மாநாடு புரட்சி , வெற்றி மாநாடு ஆகும். 


அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் புரட்சி தலைவி ஜெயலலிதாதான் என்று நாம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கு பிறகு வந்த கபட வேடதாரி அரசியல் வித்தகர்கள், வியாபாரிகள், நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் 50 ஆண்டுகால அதிமுகவை அபகரிக்கும் வேலையில் ரத்து செய்துள்ளார்கள். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என்பதை மாற்றியுள்ளனர், அவர்களை துரோகிகளை ஓட,ஓட விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. 


எனக்கு இரண்டு முறை முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் நியமனம் செய்தார்கள். மூன்றாம் முறை சின்னம்மா அவர்கள்தான் என்னை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அப்போது திரும்ப என்னிடம் முதலமைச்சர் பதவியை கேட்டார்கள் கொடுத்துவிட்டு வந்து விட்டேன். 


மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொது செயலாளராகவோ இருக்க விருப்பம் இல்லை. உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. அதைதான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா விரும்பினார்கள். 


ஜெயலலிதா அவர்கள் எனக்கு முதலமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள், நிதியமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் 13 ஆண்டுகள் கழகத்தில் பொருளாளராக என்ற பதவியும் எனக்கு தந்தார்கள். நான் பொருளாளர் பதவியை ஏற்றபோது அதிமுக 2 கோடி பற்றாகுறையில் இருந்தது. அதை 256 கோடியாக ஜெயலலிதா வழியில் உயர்த்தினேன். 


எனக்கு தந்த பதவியை நான் திருப்பி கொடுத்துட்டேன். ஐயா! பழனிசாமி அவர்களே.. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது. சின்னம்மா உங்களுக்கு முதலமைச்சர் என்ற பதவியை தந்தார்கள். அவர்களை பார்த்து நாய்கள் எதையோ குறைகிறது என்று சொன்னால், எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி. வரலாறு உன்னை மன்னிக்குமா..? இப்படிப்பட்ட ஒரு ஆள், தானே பொதுசெயலாளர் என பதவி சூட்டி கொண்டார். இது ஒரு கேலி கூத்து! புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் ஒரு அடையாளம் இருக்கிறது; நீங்களும் (இபிஎஸ்) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் ஒன்றா? அவரின் கால் தூசிக்கும் வர மாட்டீர்கள். 


இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகளை கழகத்தில் இருக்கவிடலாமா என்பதை தொண்டர்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.