தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அத்தகைய கடிதத்தை எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், ”கடந்த 03-07-2022 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் இரண்டு மாத மீன்பிடித் தடைக்குப் பிறகு அவர்களின் பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் அவர்களது படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
மீனவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுக்கும் இலங்கை கடற்படையின் நோக்கம் மிகவும் வெளிப்படையானது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் உங்களது அன்பான தலையீட்டைக் கோர விரும்புவதுடன், 12 இந்திய மீனவர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜுன் 2 ம் தேதி பாஜக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறங்கும் திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு கேட்டு தமிழகம் வந்திருந்தார். அவருக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்குமாறு பாஜக சார்பில் அதிமுகவின் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர்களின் அழைப்பை ஏற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்று வந்த நிலையில், ஹோட்டலின் வேறு வேறு அறைகளில் இருவரும் காத்திருந்தனர்.
தொடர்ந்து திரௌபதி முர்முவை சந்தித்து வரவேற்ற ஓ. பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளராக தான் திரௌபதி முர்முவை வரவேற்பதாகவும், கட்சியின் சட்ட விதிப்படி தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னதாக நிகழ்ச்சி அரங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்படும் வரையில் காத்திருந்தும், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் நின்றும் திரௌபதி முர்முவை ஓபிஎஸ் சந்தித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்