கோவில் திருவிழாக்களில் எந்த மதத்தினரும் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்துள்ள தீர்ப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமார சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேர் திருவிழா கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தை அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த குமார சுவாமி கோவில் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வந்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் எதிர்ப்பை மீறி மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்தார். இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, குங்குமம், திருநீறு பூசாதவர்களை கோயில்களில் ஏன் வடம் இழுக்க வைக்கிறார்கள்? என அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பாஜகவினர் என்றும், பாஜகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன் என்றும் பதிலடி கொடுத்தார்.
இந்த பிரச்சினை அடங்குவதற்குள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாரில் உள்ள அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதில் இந்து அல்லாதவர்களை கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நம்பிக்கையுடன் கோவிலுக்கு வருவோர் அனைவரையும் மத அடையாளத்தோடு கண்காணிக்க இயலாது என தெரிவித்தனர். மேலும் வேறு மதத்தினர் வழிபாட்டு தலங்களுக்கு வருவதை குறுகிய பார்வையில் அணுகாமல் பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி!பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்